×

கடையல் பேரூராட்சி தலைவர், கவுன்சிலரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்பிக்கு மனு

நாகர்கோவில்,செப்.16: மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி எஸ்பி ஹரி கிரண் பிரசாத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடையல் பேரூராட்சி கவுன்சிலராக இருந்து வருபவர் சேகர். இவர் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆவார். இவரது மனைவி ஜூலியட் கடையல் பேரூராட்சி தலைவராக இருந்து மக்கள் பணி செய்து வருகிறார். இவ்வாண்டில் கடையல் பேரூராட்சிக்குட்பட்ட களியல் புதுக்குளத்தை சீரமைக்க கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.31,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இ-டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மழையின் காரணமாக குளத்தின் பக்க சுவர் சரிந்துள்ளது. இது குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனரை நேரில் சந்தித்து பொறியாளரின் மேற்பார்வையில் குளத்தை சீரமைக்குமாறு பேரூராட்சி தலைவர் கோரியுள்ளார். இந்நிலையில் கடந்த 13ம்தேதி அதிகாரிகள் யாரும் இல்லாமல் குளத்தை சீரமைக்கும் முயற்சி நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த தலைவர் ஜூலியட் மற்றும் கவுன்சிலர் சேகர் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வராமல் தன்னிச்சையாக பணிகள் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் சலாமத் பீவி என்பவர் தலைவர் ஜூலியட்டை தாக்க முற்பட்டார். விபத்தில் கால் முறிந்து ஊன்றுகோல் துணையுடன் நடக்கும் கவுன்சிலர் சேகர் அவரை தடுத்தார். அப்போது சலாமத் பீவி சேகரை கீழே தள்ளிவிட்டதுடன் பிடிக்க சென்ற ஜூலியட்டையும் தள்ளிவிட்டார். இதுகுறித்து கடையாலுமூடுகாவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரையிலும் தாக்குதல் நடத்தியவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே தாங்கள் உரிய விசாரணை செய்து தாக்குதல் நடத்தியவர் மீதும், தூண்டிவிட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கைஎடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

The post கடையல் பேரூராட்சி தலைவர், கவுன்சிலரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்பிக்கு மனு appeared first on Dinakaran.

Tags : Marxist District ,SP ,Kadayal ,Nagercoil ,Selaswamy ,Hari Kiran Prasad ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...